விவசாயி இறந்ததால் ஆத்திரம்: முன்னாள் அமைச்சர் மகனின் மருத்துவமனையை சூறையாடிய கும்பல் - முத்துப்பேட்டை அருகே பரபரப்பு


விவசாயி இறந்ததால் ஆத்திரம்: முன்னாள் அமைச்சர் மகனின் மருத்துவமனையை சூறையாடிய கும்பல் - முத்துப்பேட்டை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 4:30 AM IST (Updated: 30 Dec 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே விவசாயி இறந்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல், முன்னாள் அமைச்சரின் மகனுக்கு சொந்தமான மருத்துவமனையை சூறையாடியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முத்துப்பேட்டை,

மதுரையை சேர்ந்தவர் பொன்.முத்துராமலிங்கம். தி.மு.க.வை சேர்ந்த, முன்னாள் அமைச்சரான இவருடைய மகன் மருதுபாண்டியன். டாக்டரான இவர், சென்னையிலும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்திலும் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் உள்ள மருத்துவமனை, அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டியனின் மாமனார் மேற்பார்வையில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த அழகிரி(வயது 47) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர், அழகிரிக்கு முதலுதவி சிகிச்சைகளை செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதையடுத்து உறவினர்கள் அழகிரியை முத்துப்பேட்டையில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அழகிரி பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அழகிரியின் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள், மருதுபாண்டியனின் மருத்துவமனைக்கு சென்றனர். அவர்கள், மருத்துவமனையில் இருந்த ஊழியர்களிடம், அழகிரிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அவருடைய சாவுக்கு காரணம் நீங்கள் தான் என்றும் கூறி தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவமனையில் இருந்த எக்கோ கருவி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை கருவிகளையும், கணினி உள்ளிட்ட பொருட்களையும் அடித்து உடைத்து மருத்துவமனையை சூறையாடி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து டாக்டர் மருதுபாண்டியன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், தனது மருத்துவமனையை 10 பேர் கொண்ட கும்பல் சூறையாடியதாகவும், இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதமாகி உள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். அதன்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையை சூறையாடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story