மணல் கொள்ளையர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் - புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை


மணல் கொள்ளையர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் - புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Jan 2019 4:40 AM IST (Updated: 1 Jan 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் மணல் கொள்ளையர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொண்டி,

திருவாடானை போலீஸ் துணை சரகத்தின் புதிய போலீஸ் துணை சூப்பிரண்டாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருவாடானை போலீஸ் துணை சரகத்தில் பொதுமக்கள் தங்களின் காவல் துறை சம்பந்தமான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் மனுவாக அளித்தால் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணைக்கு பின்னர் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களின் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுஉள்ளது.

மேலும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றச்செயல்கள் தடுக்கப்படும். திருவாடானை தாலுகாவில் மணல் கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கொள்ளையர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

திருவாடானை பகுதியில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச்சம்பவங்கள் தடுக்கப்படுவதுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் வகையில் நடந்து கொள்பவர்கள், ரவுடிகள், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு ரோந்து பணிகள் மூலம் குற்றச்செயல்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுபானம் விற்பது, போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன் அந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு மற்றும் வழிகாட்டுதலுடன் திருவாடானை காவல் துணை சரகத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு மேம்பட அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story