19–வது மாடியில் இருந்து தள்ளி இளம்பெண் கொலை கணவர் கைது
19–வது மாடியில் இருந்து தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள நாவலூரை அடுத்த தாழம்பூர் ஊராட்சியில் 29 மாடிகள் கொண்ட ராணுவ குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி சந்தோஷ்குமார், அவரது மனைவி ஷீலாதேவி (வயது 20) ஆகியோர் அங்கு தங்கி வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 27–ந் தேதி மாலை வழக்கம் போல் இருவரும் வெவ்வேறு தளங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 4 மணி அளவில் 19–வது மாடியில் கீழே விழுந்து ஷீலாதேவி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷீலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் ஷீலாதேவி 19–வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஷீலாதேவி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை தள்ளிவிட்டு கொலை செய்தனரா? என்ற கோணத்தில் தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஷீலாதேவி உறவினர்கள் அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரித்தனர்.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ்குமார் கூறும்போது, ‘மனைவி ஷீலாகுமாரியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது. அதனால் அவரை 19–வது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்தேன்’ என்றார்.
போலீசார் சந்தோஷ்குமாரை மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.