‘பேஸ் டிராக்கிங் சிஸ்டம்’ மூலம் பழைய குற்றவாளிகள் கோவிலுக்குள் நுழையாமல் கண்காணிக்க ஏற்பாடு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்


‘பேஸ் டிராக்கிங் சிஸ்டம்’ மூலம் பழைய குற்றவாளிகள் கோவிலுக்குள் நுழையாமல் கண்காணிக்க ஏற்பாடு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 2 Jan 2019 5:12 AM IST (Updated: 2 Jan 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழைய குற்றவாளிகள் நுழையாதபடி கண்காணிக்க ‘பேஸ் டிராக்கிங் சிஸ்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழைய குற்றவாளிகள் நுழையாதபடி கண்காணிக்க ‘பேஸ் டிராக்கிங் சிஸ்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தீபத் திருவிழாவின் போது கடந்த 2 ஆண்டுகளாக குற்ற செயல்களை தடுக்க காவல் துறை மூலம் ‘பேஸ் டிராக்கிங் சிஸ்டம்’ பயன்படுத்தப்பட்டது.

இதன் மூலம் பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து துப்புத் துலக்கப்பட்டு பழைய குற்றவாளிகள் உடனுக்குடன் கண்டுபிடிக் கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பழைய குற்றவாளிகளின் புகைப்படம் கணினியில் ஏற்கனவே பதிவேற்றப்பட்டு உள்ளதால் கண்காணிப்பு கேமராவில் அந்த குற்றவாளியின் உருவம் பதிவானதும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களின் செயல்பாட்டை கண்டறிந்து கைது செய்வது எளிதாகும். எனவே அருணாசலேஸ்வரர் கோவிலில் பழைய குற்றவாளிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகள் நுழையாதபடி கண்காணிக்க ‘பேஸ் டிராக்கிங் சிஸ்டம்’ இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் செயல்படுத்த நிரந்தரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “திருவண்ணாமலைக்கு சுற்றுலாவிற்காக ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர். இவர்களில் அனுமதியின்றி தங்கி உள்ள வெளி நாட்டினரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள வெளி நாட்டினர் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரிவலப்பாதையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் குழுவுடன் வெளிநாட்டினரின் பாஸ்போர்ட்டு மற்றும் விசா போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.

அதுபோல் தொடர்ந்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ‘சி’ படிவம் கொடுக்காமல் வெளிநாட்டினரை தங்க வைத்து உள்ள விடுதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார்.


Next Story