வெள்ளாற்று பகுதிகளில் சுரண்டப்படும் மணல் கொள்ளை சிதறிக்கிடக்கும் எலும்புகளால் பொதுமக்கள் அச்சம்


வெள்ளாற்று பகுதிகளில் சுரண்டப்படும் மணல் கொள்ளை சிதறிக்கிடக்கும் எலும்புகளால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 2:43 PM GMT)

அன்னவாசல் அருகே வெள்ளாற்று பகுதிகளில் மணல் கொள்ளைகள் நடைபெறுவதால் வெள்ளாற்று பகுதிகளை ஒட்டியுள்ள சுடுகாடுகளில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனார்.

அன்னவாசல்,


தமிழக அரசு மணல் கொள்ளையை தடுக்க அரசே மணல் குவாரி நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரி அமைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் அரசு மணல் குவாரிகள் அமைத்து, அதில் சில குவாரிகள் செயல்பட்டும் வருகின்றது. அரசு மணல் குவாரிகள் அமைத்து மணல் கொள்ளையை தடுக்க நினைத்தாலும், மணல் கொள்ளை என்பது இன்று வரை தொடர்கதையாகிவிட்டது.


மணல் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வெள்ளாற்று படுக்கைகளையும் மணல் கொள்ளை விட்டு வைக்கவில்லை. குடும்மியான்மலை அருகே உள்ள சேரனூர் பகுதியில் வெள்ளாற்றில் கொள்ளை போகும் மண்வளத்தை சொல்லி மாளாது என்று அப்பகுதி பொதுமக்கள் வருந்துகின்றனர்.

அப்பகுதியில் இரவு, பகலாக ஆற்று மணலை மாட்டு வண்டிகளில் அள்ளி விற்று வருகின்றனர். இதனால் 7 சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சுடுகாட்டில் மணலை சுரண்டுவதால் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால், சுடுகாடே இல்லாமல் போகும் அவலம் உள்ளதாக ஆதங்கப்படுகின்றனர் அப்பகுதி மக்கள்.


மணல் கொள்ளையை தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும், அவர்கள் குறித்த விவரங்களுடன் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினாலும் யாரும் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்த மணல் கொள்ளை தொடர்ந்தால், சுடுகாட்டில் இனி இறந்தவர்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டு விடும். தினமும் தொடரும் இந்த மணல் கொள்ளையை தடுத்து, சுடுகாட்டை மீட்டுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

வெள்ளாற்று பகுதியில் தினசரி இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடந்து வருகின்றது. இது வரையில் அருகே உள்ள அரசு வேளாண் கல்லூரி கட்டுவதற்கு மணல் அள்ளி செல்வதாக மணல் அள்ளுபவர்கள் தெரிவித்து மணல் அள்ளி வந்தனர். தற்போது தங்கள் பயன்பாட்டில் உள்ள ஆற்றங்கரையை ஒட்டியுள்ள 7 சமுதாயங்களை சேர்ந்த மக்களின் சுடுகாடுகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுடுகாட்டில் மணல் அள்ளுவதால் இறந்தவர்களை புதைத்த இடத்தில் எலும்புகள் வெளியேறி சிதறிக்கிடக்கிறது. மனிதன் கடைசியில் நிம்மதியாக செல்லக்கூடிய இடம் சுடுகாடு. ஆனால் சுடுகாட்டில் நடக்கும் மணல் கொள்ளையால் அந்த நிம்மதியும் இல்லாமல் இறந்தவர்களின் உடலில் உள்ள எலும்புக்கூடுகள் சிதறிக்கிடக்கிறது என்று கூறினர்.

Next Story