ஐகோர்ட்டு உத்தரவை மீறி தொடரும் மணல் திருட்டு; உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ஐகோர்ட்டு உத்தரவை மீறி தொடரும் மணல் திருட்டு; உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 8:28 PM GMT)

ஆற்றுப்படுகைகளிலும், கண்மாய்களிலும் மணல் மற்றும் சவடுமண் அனுமதி இல்லாமல் அள்ளப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு தொடர் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் மணல் திருட்டு தொடரும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் குண்டாறு மற்றும் கிருதுமால் ஆற்றுப்படுகைகளில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மதுரை ஐகோர்ட்டும் இந்த ஆற்றுப்படுகைகளில் மணல் திருட்டு நடைபெறுவதை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டது. மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி அடையாத மதுரை ஐகோர்ட்டு வக்கீல் கமி‌ஷனரை நியமித்து மணல் கொள்ளை நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதே போன்று கண்மாய்களிலும் அனுமதி பெற்ற குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி மண் அள்ளுவதை அனுமதிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் மாவட்டம் முழுவதும் ஆற்றுப்படுகைகளிலும், கண்மாய்களிலும், அணைப்பகுதிகளிலும், வரத்து கால்வாய்களிலும் அனுமதியில்லாமல் மணல் அள்ளிச் செல்வது தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளப்படுவதால் குடிநீர் மற்றும் பாசன வசதி பாதிக்கப்படுவதாக மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை கூட விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டி கண்மாயில் தண்ணீர் இருந்தும் ஜே.சி.பி.எந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாக கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் பகுதியில் நாள்தோறும் அனுமதி இல்லாமல் லாரிகளில் ஆற்று மணல், சவடு மண் அள்ளிச் செல்லப்படுவதாக போலீசார் லாரிகளை பறிமுதல் செய்வதும், வழக்குகள் பதிவு செய்வதும் நடைபெறுகிறதே தவிர, இதனை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை எடுக்க இயலாத நிலை நீடிக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை, கனிமவளத்துறையினர் போலீசாரின் உதவியோடு மணல் திருட்டை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் நீர்நிலைகள் முற்றிலுமாக சீரழிந்து எதற்கும் பயன்படாத நிலை ஏற்பட்டுவிடும்.


Next Story