மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கு: கவர்னர் மாளிகை போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு போலீஸ் காவல் மேலூர் கோர்ட்டு அனுமதி
மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கைதான கவர்னர் மாளிகை போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மேலூர் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் பாஸ்கரன். டாக்டரான இவரது வீட்டில் கடந்த மாதம் 6–ந் தேதி, 6 பேர் கொண்ட ஒரு கும்பல் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த கொள்ளை தொடர்பாக சென்னை கவர்னர் மாளிகை பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணியாற்றி வந்த மதுரையை சேர்ந்த குமார், திருமங்கலத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதே போல் திருப்பூர் போலீஸ்காரர் சரவணக்குமார் சரண் அடைந்தார். கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸ்காரர்கள் உள்பட பலர் சிக்கியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட 23 பேர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு, தமிழகத்தில் நடந்த பல்வேறு திருட்டு, கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்த அனுமதி கேட்டு, மேலூர் கோர்ட்டில் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சிறையில் உள்ள கவர்னர் மாளிகை போலீஸ்காரர் குமார் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதி சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.