மன ரீதியான பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர்: மாணவர்களின் உணர்வுகளை அறிய பள்ளிகளில் குழு அமைக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மன ரீதியான பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர்: மாணவர்களின் உணர்வுகளை அறிய பள்ளிகளில் குழு அமைக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

மன ரீதியான பிரச்சினைகளில் சிக்கியுள்ள மாணவர்களின் உணர்வுகளை அறிந்து கொள்ள வசதியாக பள்ளிகளில் குழு அமைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லையைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது 19 வயது மகள் கடந்த 2017–ம் ஆண்டு திடீரென மாயமானார். இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் தனது மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரரின் மகளை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, கல்லூரி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெற்றோருக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறினார். பின்னர் மனுதாரருடன் அவரது மகள் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒழுங்காக கல்வி கற்க முடியாமல் மாணவர்களுக்கு இடையே பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவர்களின் மன ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதில் யாருக்கும் போதிய அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு தமிழகத்தில் உள்ள கல்வி முறை, பெற்றோர்–ஆசிரியர் உறவு முறை, நன்னடத்தை, உளவியல் மற்றும் முன்னேற்றத்தில் மாணவர்களுக்கு கிடைத்து வரும் ஆதரவு, விளையாட்டு, கல்வி போன்ற சூழ்நிலைகளில் மாணவர்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாகவும், கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே நடக்கும் வன்முறையை போக்குவதற்கான வழிகள் உள்ளிட்டவை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த குழுவினர் பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கையை ஐகோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

அதன்பேரில் மாணவர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய உத்தரவை நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் பிறப்பித்தனர். அந்த உத்தரவு வருமாறு:–

மாணவர்களின் உணர்வுகளை அறிந்து கொள்ள வசதியாக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வட்டார அளவில் குழு அமைக்க வேண்டும். அவர்களின் குறைகள், பரிந்துரைகளை அறிந்து கொள்ளும் வகையில் உரிய நடைமுறையை ஏற்படுத்தவும், மாணவர்களின் உடல்நலம், கல்வித்திறனை ஆசிரியர்கள் பராமரிக்கவும் வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களின் திறன் வளர்ப்பு கையேடுகளை மாவட்ட நூலங்கள் வெளியிட வேண்டும்.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடையே ஒருங்கிணைந்த வாட்ஸ்–அப் குழு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடையே ஒழுக்கத்தை போதிக்கும் வகையில் கருத்தரங்கு, விழிப்புணர்வு முகாம், கல்வி கண்காட்சிகள் நடத்தி, அதன் மூலம் அவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான ஆலோசனைகளையும் அளிக்க வேண்டும். இதற்காக ஒருங்கிணைந்த இணையதளம் தொடங்கி, மாணவர்–பெற்றோர் பிரச்சினைகளை தீர்க்க குறைகேட்கும் பிரிவுகளையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story