மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை; பவானி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை; பவானி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 10:45 PM GMT (Updated: 4 Jan 2019 9:12 PM GMT)

மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு பவானி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள மாமரத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. (வயது 65). இவருடைய மகள் லட்சுமி. மகன் மூர்த்தி.

அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கும், லட்சுமிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அதன்பின்னர் வியாபாரத்துக்காக அடிக்கடி சுப்பிரமணி மாமனார் பழனிச்சாமியிடம் பணம் வாங்கி வந்தார். பழனிச்சாமியும் உதவி செய்தார்.

இந்தநிலையில் பழனிச்சாமி ஒரு கட்டத்தில், மருமகனுக்கு பணம் தர மறுத்துள்ளார். இதனால் சுப்பிரமணி பழனிச்சாமியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இது சம்பந்தமாக கடந்த 2016–ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுப்பிரமணி, மாமனார் பழனிச்சாமியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி இறந்துவிட்டார். உடனே சுப்பிரமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சுப்பிரமணியை கைது செய்தார்கள். மேலும் பவானி 4–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். ‘மாமனார் பழனிச்சாமியை கொலை செய்ததாக சுப்பிரமணிக்கு 302–வது சட்டப்பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், மேலும் 307–வது சட்ட பிரிவின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 506–வது பிரிவு 2–ன் கீழ் 7 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் சுப்பிரமணி அனுபவிக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுப்பிரமணி கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Next Story