கோவையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினார்கள்.
கோவை,
கோவை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாலு, துணை தலைவர் ரமேஷ், செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதன்பின்னர் அவர்கள் கூறியதாவது:-
தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை தடை செய்யப்பட்டவை என்று கூறி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் பொருட்களை பேக்கிங் செய்ய வைக்கப்பட்டுள்ள அடைப்பான்களை (கன்டெய்னர்) பறிமுதல் செய்கின்றனர். குறிப்பாக மளிகை கடை, சிப்ஸ் கடை, இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் இதனை பறிமுதல் செய்கிறார்கள். இதனால் சிறு, குறு வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே தடையை அமல்படுத்த வரும் அதிகாரிகளிடம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள 14 வகையான பொருட்களை மட்டுமே பறிமுதல் செய்ய ஆவன செய்ய வேண்டும். மக்கும் தன்மையுள்ள கேரி பைகள் தயாரிப்பவர் மற்றும் விற்பனை செய்பவர், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்றே தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும் என்று விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் கோவை மாநகராட்சி பகுதிகளில் இந்த விதிக்கு புறம்பாக கேரி பைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதில் தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
முன்னதாக கோவை ராஜவீதி, ரங்கே கவுடர் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வைத்துள்ள 64 கடைகளையும் நேற்று அடைத்து போராட்டம் நடத்தினார்கள்.
Related Tags :
Next Story