ஆன்லைன் விற்பனையில் தொடரும் மோசடி: செல்போன் ஆர்டருக்கு பழுதான சார்ஜர், கைக்கெடிகாரம் சைக்கிள் கடைக்காரர் ஏமாற்றம்


ஆன்லைன் விற்பனையில் தொடரும் மோசடி: செல்போன் ஆர்டருக்கு பழுதான சார்ஜர், கைக்கெடிகாரம் சைக்கிள் கடைக்காரர் ஏமாற்றம்
x
தினத்தந்தி 4 Jan 2019 11:02 PM GMT (Updated: 4 Jan 2019 11:02 PM GMT)

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த சைக்கிள் கடைக்காரருக்கு, செல்போனிற்கு பதிலாக பழுதான சார்ஜர், கைக்கெடிகாரத்தை வந்ததால் ஏமாற்றமடைந்தார்.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே உள்ள மடத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுரிராஜன்(வயது 55). இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.வி.யில் ஒளிபரப்பான செல்போன் விற்பனை விளம்பரத்தை பார்த்துள்ளார். அப்போது சவுரிராஜன், ரூ.3,500 மதிப்புள்ள செல்போனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஆன்லைன் வாயிலாக ஆர்டர் செய்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று அவர் ஆர்டர் செய்த செல்போன் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டி தபால் மூலம் வீட்டிற்கு வந்தது. அப்போது தபால்காரரிடம் ஆர்டர் செய்த பணம் ரூ.3,500ஐ செலுத்தி அட்டை பெட்டி வாங்கினார்.

இதையடுத்து அந்த அட்டை பெட்டியை அவர் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அதனுள் செல்போன் இல்லை. மாறாக அதில் பழுதான கைக்கெடிகாரம், சார்ஜர் இருந்துள்ளது. அத்துடன் சிறிய காலியான அட்டை பெட்டி ஒன்றும் இருந்தது. இதனால் அவர் செல்போன் ஆர்டர் செய்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தபால் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, அவர்கள் எங்களுக்கும், அந்நிறுவனத்துக்கும் தொடர்பு கிடையாது. இதுபோன்று இனிமேல் ஆன்லைன் விற்பனையை நம்பி ஏமாற வேண்டும் என்றனர்.

சமீப காலமாக ஆன்லைன் பொருட்கள் விற்பனை மோசடி நடந்து வருகிறது. இதற்கிடையே செல்போன் ஆர்டர் செய்த சைக்கிள் கடைக்காரருக்கு அதற்கு பதிலாக பழுதான சார்ஜர், கைக்கெடிகாரம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story