கொட்டாம்பட்டியில் போலீஸ் காவலில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர் திடீர் சாவு; கஞ்சா சப்ளை செய்ததாக கைதானவர்
கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டு, கொட்டாம்பட்டி போலீஸ் காவலில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர் திடீரென்று இறந்துபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டாம்பட்டி,
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட தனிப்படை இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியை சேர்ந்த ஜோசப் (வயது 65) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளரான சின்ன வெள்ளையன் (வயது 47) என்பவர் ஜோசப்புக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் நத்தம் பகுதிக்கு சென்று சின்ன வெள்ளையனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1½ கிலோ கஞ்சா, ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சின்ன வெள்ளையனை கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்தநிலையில் போலீஸ் காவலில் இருந்த சின்ன வெள்ளையன் இரவு திடீரென்று மயங்கினார். இதனால் போலீஸ்காரர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, சின்ன வெள்ளையன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் காவலில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர் திடீரென்று இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு விரைந்தார். அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் சின்ன வெள்ளையன் சாவு குறித்து விசாரணை நடத்தினார்.
இறந்துபோன சின்ன வெள்ளையனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் போலீசாரிடமும், அ.தி.மு.க.வினரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.