4-வது நாளாக சோதனை: நாகர்கோவிலில் மூடை, மூடையாக தெர்மாகோல் பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


4-வது நாளாக சோதனை: நாகர்கோவிலில் மூடை, மூடையாக தெர்மாகோல் பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2019 5:00 AM IST (Updated: 5 Jan 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 4-வது நாளாக நேற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைகள், குடோனில் இருந்த தெர்மாகோல் பொருட்கள் மூடை, மூடையாக பறிமுதல் செய்யப்பட்டன.

நாகர்கோவில்,

பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் கடைகள் மற்றும் குடோன்களில் யாராவது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.

நாகர்கோவில் நகராட்சி பகுதியிலும் தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்றும் 4-வது நாளாக சோதனை நடந்தது. நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் சந்தையில் நகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் தலைமையில், நகரமைப்பு அதிகாரி விமலா, சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள், வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள 8 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பேப்பர் தட்டுகள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றிலும், அந்த கடைக்கு சொந்தமான குடோனிலும் நடத்திய சோதனையில் மூடை, மூடையாக தெர்மாகோல் தட்டு, கப்புகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்ட பேப்பர் தட்டுகள், ஸ்பூன்கள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவை தெர்மாகோல் பொருட்கள் தான் அதிகமாக இருந்தன.

இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தெர்மாகோல் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் லாரியில் ஏற்றிச்சென்று அழித்தனர்.

ஆசாரிபள்ளம்

மேலும் நகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆசாரிபள்ளம் பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 60 கடைகளில் நடந்தது. அப்போது அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகள், தெர்மாகோல் தட்டுகள் மற்றும் சில்வர் பயன்படுத்தப்பட்ட தட்டுகள் என 55 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 2 ஓட்டல்கள், 3 மளிகை கடைகள் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடை ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகள், தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அவர்கள் பயன்படுத்தவில்லை. எனவே அபராதம் விதிக்கப்படவில்லை.

இந்த சோதனை தொடர்பாக நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் கூறியதாவது:-

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் எனது மேற்பார்வையில் இதுவரை நடந்த சோதனையில் 220 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்திய, விற்பனை செய்த கடைக்காரர்களிடம் இருந்து கடந்த 4 நாட்களில் ரூ.60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சில்வர் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பை, கவர்களையும் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் உணவு பொருள் வழங்குவதற்கு சில்வர் பயன்படுத்தப்பட்ட கவரை ஓட்டல் களில் பயன்படுத்தக்கூடாது. பாலி எத்திலினால் தயாரிக்கப்பட்ட கேரி பைகளும் பயன்படுத்தக்கூடாது. நெய்த துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்தலாம். ஜவுளிக்கடைகள் போன்றவற்றில் வழங்கப்படும் கட்டை பைகள் பயன்படுத்துவதற்கு இதுவரை தடை செய்யவில்லை. ஏனெனில் அந்த பைகள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மக்களால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், மேற்பார்வையாளர் நாராயண பாலன் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரி சன்னதிதெரு, காந்தி மண்டபம் சாலை, கடற்கரை சாலை, விவேகானந்தபுரம், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் வைத்திருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 35 கிலோ பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

‘பார்சல்’ சாப்பாடுக்கு பாத்திரம் கட்டாயம்

பிளாஸ்டிக் பொருட்கள் தடை உத்தரவை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பெரிய ஓட்டல்கள் சிலவற்றில், ‘பார்சல் சாப்பாட்டுக்கு பாத்திரம் கட்டாயம்‘ என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதேபோல் ஒருசில டீக்கடைகளின் முன்பும் பார்சல் டீ வாங்குபவர்கள் தூக்குபாத்திரம் கொண்டுவர வேண்டும் என்றும் எழுதப்பட்ட சுவரொட்டியை ஒட்டி வைத்துள்ளனர். எனவே வழக்கம்போல் வெறும் கையுடன் பார்சல் சாப்பாடு, டீ வாங்க ஓட்டல் மற்றும் டீக்கடைகளுக்கு வருபவர்கள் எதுவும் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


Next Story