திண்டுக்கல் தொழிலாளி கொலை வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 6 பேர் சரண்


திண்டுக்கல் தொழிலாளி கொலை வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 6 பேர் சரண்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 6 பேர் சரண் அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 48). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 3–ந்தேதி காலை தனது மகள் ஹெலன் சோபியாவை (17) பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக முருகபவனம் பஸ்நிறுத்தத்துக்கு மொபட்டில் வந்தார். அங்கு தனது மகளை இறக்கிவிட்டுவிட்டு இந்திராநகர் அருகே திரும்பி வந்தபோது, அந்த பகுதியில் மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அருள்சாமியை மறித்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் மொபட்டை கீழே போட்டுவிட்டு ஓடினார். ஆனால் அவரை ஓட, ஓட விரட்டி அந்த கும்பல் அரிவாள்களால் கொடூரமாக வெட்டிக்கொன்றது. இந்த கொலை குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முன்விரோதத்தில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது, அருள்சாமியின் தம்பியும் பிரபல ரவுடியுமான பாஸ்கருக்கும் (36), திண்டுக்கல் கொள்ளுப்பட்டறையை சேர்ந்த சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் சரவணன் தரப்பை சேர்ந்த அய்யம்பெருமாள், ராம்குமார் ஆகியோரை பாஸ்கர் தரப்பினர் கொலை செய்துள்ளனர். இதனால் பாஸ்கரை பழிக்குப்பழியாக சரவணன் தரப்பினர் கொன்றுவிட்டனர்.

தம்பியை கொன்றதற்காக அருள்சாமி தங்களை பழிவாங்கிவிடக்கூடாது என பயந்து சரவணன் தரப்பினர் அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகள் மதுரை மாவட்டத்துக்கு தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது.

உடனே தனிப்படையினர் அங்கு விரைந்தனர். போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கொலையாளிகளான திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ரங்கமூர்த்தி (30), சிறுமலையை சேர்ந்த சக்திவேல் (23), பாரதிபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (24), சுதாகர் (25), உதயன் (25), அன்பழகன் (30) ஆகிய 6 பேர் நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து, அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி, 6 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். சரண் அடைந்த 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் மேற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்த பிறகுதான், எதற்காக அருள்சாமியை கொன்றனர் என்ற விவரம் தெரியவரும் என்று நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் குமரேசன் தெரிவித்தார்.


Next Story