உடைப்பு ஏற்பட்டு குழாயில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


உடைப்பு ஏற்பட்டு குழாயில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2019 4:15 AM IST (Updated: 7 Jan 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

உடைப்பு ஏற்பட்டு குழாயில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது தரம் அற்ற பொருட்களை கொண்டு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் இந்த திட்டத்தின் செயல்பாடும் திருப்தி அளிக்காத நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மயிலாடுதுறை கச்சேரி சாலை, சின்னக்கடை தெரு, காந்திஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பும், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள சாலைக்கார தெருவில் ஆழ்நுழை தொட்டியின் மேல் மூடியில் அதிக அழுத்தத்தின் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக கழிவுநீர் தேங்கி நிற்கும் சாலைக்கு அருகில் கோவில்கள், பள்ளிக்கூடம், கடைத்தெரு, குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. தற்போது சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மயிலாடுதுறை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை தடுக்க பாதாள சாக்கடை குழாய் உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோடி. கண்ணன், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story