குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வினியோகம் தொடங்கியது


குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 7 Jan 2019 11:00 PM GMT (Updated: 7 Jan 2019 4:49 PM GMT)

குமரி மாவட்டத்தில் 5¼ லட்சம் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வினியோகம் தொடங்கியது.

ஆரல்வாய்மொழி,


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாகவும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5–ந் தேதி தொடங்கி வைத்தார்.


அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், பயனாளிகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

 மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார்.


விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசும்போது கூறியதாவது:–

‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் தமிழக முதல்– அமைச்சரின் ஆணைப்படி ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் வழங்கப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில் 770 ரே‌ஷன் கடைகள் மூலமாக மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரம் அனைத்து வகையான ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு இன்று (அதாவது நேற்று) முதல் படிப்படியாக 7 நாட்களுக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஐ£, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சகாய திலகராஜ் நன்றி கூறினார்.


பின்னர் தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரே‌ஷன் கடை, புத்தேரி கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள ரே‌ஷன் கடை, கோட்டார் கம்பளம் தொடக்க வேளாண்மை கடன் சங்க ரே‌ஷன் கடை, இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க ரே‌ஷன் கடை ஆகியவற்றில் நடந்த விழாக்களிலும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 பணமும் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

Next Story