திருத்துறைப்பூண்டியில் மின்மயானம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திருத்துறைப்பூண்டியில் மின்மயானம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 7:12 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் மின்மயானம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சிகள், 92 கிராமங்கள் உள்ளன. இதில் கிராமங்களில் யாராவது இறந்துபோனால் எரிக்கவோ, புதைக்கவோ போதிய இடவசதியில்லாமல் சாலை ஓரங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே உடல்களை எரிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அந்த புகையை சுவாசிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தொடர் மழை பெய்வதால் விறகுகள், ராட்டிகள் எரியாமல் பிரேதங்கள் எரியாமல் இருக்கும் அவலநிலை உள்ளது. இறந்தவர்களின் உடல்களை பயிர் செய்த வயல்கள் வழியாக தூக்கி செல்வதால் பயிர்கள் நாசமாகும் நிலை உள்ளது.

திருத்துறைப்பூண்டி பகுதிக்கு மின்மயானம் அமைக்க வேண்டும் என அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நாகை சாலையில் மின்மயானம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து மின்மயானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு சில சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் உள்ள குப்பைமேடு பகுதிகளில் மின் மயானம் அமைக்க இடத்தை தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து மின்மயானத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story