தரமாக இல்லை என்று சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


தரமாக இல்லை என்று சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:30 AM IST (Updated: 8 Jan 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

தரமாக அமைக்கப்படவில்லை என்று கூறி சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்தி பெற்ற நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், அங்கிருந்து திருவெள்ளறை பெருமாள் கோவிலுக்கு செல்கின்றனர். அவர்கள் திருப்பைஞ்சீலி வடக்குத் தெரு வழியாக தீராம்பாளையம், தில்லாம்பட்டி வழியாக திருவெள்ளறை கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் திருப்பைஞ்சீலி வடக்குத் தெரு மற்றும் வனத்தாயி அம்மன் கோவில் செல்லும் சாலை ஆகியவை குண்டும், குழியுமாக இருந்தது. இது குறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த சாலையை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. அந்த நிதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை தரமாக அமைக்கப்படவில்லை என்று கூறி பணியை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அவர்கள் தரமான முறையில் சாலையை அமைக்குமாறும், குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் வேலையை கண்காணித்து வந்த ஒப்பந்ததாரரின் உதவியாளரிடம் கூறினர். அதற்கு அவர், பொதுமக்களை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் உரிய அதிகாரிகள் வரும் வரை சாலை போடும் பணியை மேற்கொள்ள விடமாட்டோம் என்று கூறி சாலையில் நின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் கருணாநிதி மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சாலை தரமாக அமைக்கவும், வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் பொதுமக்களிடம் மரியாதை குறைவாக பேசிய ஒப்பந்ததாரரின் உதவியாளரை அதிகாரிகள் கண்டித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை 9.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story