அம்மாபேட்டை பகுதியில் 150 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்காமல் பணியாளர்கள் புறக்கணிப்பு


அம்மாபேட்டை பகுதியில் 150 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்காமல் பணியாளர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2019 11:30 PM GMT (Updated: 7 Jan 2019 10:03 PM GMT)

விபத்தில் ஊழியர் இறந்ததை கண்டித்து அம்மாபேட்டை பகுதியில் உள்ள 150 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்காமல் பணியாளர்கள் பணியை புறக்கணித்தனர்.

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி ராமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் குமரேசன் (வயது 28). இவர் மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி மனோ கஸ்தூரி (25). இவர் திப்பிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு ரே‌ஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். குமரேசனுக்கும், மனோ கஸ்தூரிக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் தமிழக அரசு நேற்று முதல் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரே‌ஷன்கடைகளில் பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்டு இருந்தது. இதனால் அம்மாபேட்டை பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் ரே‌ஷன் கடைகளில் பணியாளர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குமரேசன் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு கரும்பு கட்டுகள் ஏற்றிய லாரி ஒன்று வந்தது.

இதில் லாரி டிரைவருக்கு மாணிக்கம்பாளையம் கூட்டுறவு சங்கம் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இதனால் லாரி டிரைவர் சங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு வழிகாட்டும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அந்த டிரைவர் லாரி அம்மாபேட்டை அருகே உள்ள சித்தாரில் நிற்பதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து சங்க அதிகாரிகள் குமரேசனிடம் கரும்பு ஏற்றிய லாரியை கொண்டு வருமாறு கூறினார்கள். இதையடுத்து குமரேசன் மோட்டார்சைக்கிளில் சித்தார் நோக்கி புறப்பட்டு சென்று டிரைவரிடம் பேசினார். அதன்பின்னர் லாரி முன்னால் சென்று கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சித்தாரில் மேட்டூர்–பவானி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தன்னுடைய மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக குமரேசன் ரோட்டை கடந்து சென்றார்.

அப்போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த மற்றொரு லாரி குமரேசன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குமரேசனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்தில் குமரேசன் இறந்த தகவல் கிடைத்ததும் கூட்டுறவு சங்கம் மற்றும் ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பணியை புறக்கணித்தனர்.

மேலும், அம்மாபேட்டை மற்றும் அந்தியூர், பவானி ஆகிய வட்டாரங்களில் உள்ள 150 ரே‌ஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரே‌ஷன் கார்டுகளுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இதுகுறித்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றி வரும் குமரேசன் பணிச்சுமையின் காரணமாக தான் விபத்தில் இறந்து உள்ளார். அதனால் குமரேசனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, ரே‌ஷன் கடை மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்றனர்.


Next Story