எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்களில் உரிய கல்வித்தகுதி பெறாதவர்கள் பணியாற்றுகிறார்களா? சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்களில் உரிய கல்வித்தகுதி பெறாதவர்கள் பணியாற்றுகிறார்களா? சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:45 AM IST (Updated: 9 Jan 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்களில் உரிய கல்வித்தகுதி பெறாதவர்கள் பணியாற்றுகிறார்களா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி சிறுமிகள் 2 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கையில் ஒரு சிறுமிக்கு எச்.ஐ.வி. கிருமியுடன் ரத்தம் செலுத்தப்பட்டது. இப்போது சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமியுடன் ரத்தத்தை செலுத்தி உள்ளனர். இதன்மூலம் ரத்த வங்கிகள் முறையாக கண்காணிக்கப்படுவது இல்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் உரிமங்களை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் எய்ட்ஸ் பரவுவதை தடுத்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்தல், ஆலோசனை மற்றும் மறுவாழ்வு வழங்குதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். ஆனால் இந்த பணிகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் முறையாக மேற்கொள்வது இல்லை. இந்த ரத்த வங்கிகளில் உரிய கல்வித்தகுதி இல்லாத ஒப்பந்த பணியாளர்கள்தான் உள்ளனர். இதனால் ரத்தம் தேவைப்படும் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தானமாக பெறப்படும் ரத்தம், மருத்துவ துறையினரின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் கவனக்குறைவாலும் வீணடிக்கப்பட்டு உள்ளது. அலட்சியமாக ரத்தம் செலுத்தப்பட்டதால் பலருக்கு எச்.ஐ.வி. கிருமி பரவியுள்ளது.

இதனால் ரத்த வங்கிகளை கண்காணிக்கவும், ரத்தம் கொடுப்பவர்கள், பெறுபவர்களின் விவரங்களை தொடர்ந்து பராமரிக்கவும், உரிய கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களை நீக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்களில் உரிய கல்வித்தகுதி இல்லாமல் தற்போதும் பலர் பணியாற்றி வருவது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது“ என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story