கற்பழிப்பு, ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு; தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


கற்பழிப்பு, ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு; தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிப்பு, ஆசிட் வீச்சு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த ஏ.வி.சகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் திடீர் மரணம், கற்பழிப்பு, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் கடந்த 2013–ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.

அதன்படி திடீர் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.3 லட்சமும், ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2½ லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த திட்டம் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, இழப்பீட்டு தொகை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமும் விண்ணப்பித்து இழப்பீட்டை பெறும் வழக்கம் உள்ளது.

ஆனால் உண்மையில் இதுபோன்ற திட்டங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்ற தகவல்கள் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் உள்பட பலருக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் கற்பழிப்பு போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் இழப்பீட்டு தொகையை பெற தானாக முன் வருவதில்லை.

எனவே இதுபோன்ற சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்த உடன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர், போலீசார், மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று உரிய இழப்பீட்டை நேரடியாக வழங்க உத்தரவிட வேண்டும். கடந்த 2013–ம் ஆண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் உரிய இழப்பீட்டை பெறாதவர்களுக்கும் அந்த தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story