எலியார்பத்தி சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு 30 சதவீத கட்டண விலக்கு அளித்ததை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
எலியார்பத்தி சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு 30 சதவீத கட்டண விலக்கு அளிக்கும் உத்தரவை ரத்து செய்ய மறுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
அருப்புக்கோட்டை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
மதுரை–தூத்துக்குடி 4 வழிச்சாலையில் அருப்புக்கோட்டை உள்ளது. இந்த சாலையில் எலியார்பத்தி எனும் இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தூத்துக்குடி, அருப்புக்கோட்டை செல்லும் வாகனங்களுக்கு இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த சாலை கடந்த 2011–ம் ஆண்டு முதல் பராமரிப்பு செய்யப்படவில்லை. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது. இந்த சாலையில் செல்லும் பஸ்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் பொதுமக்களும், பஸ் உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சாலையை சீரமைக்க மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மதுரை–தூத்துக்குடி 4 வழிச்சாலையில் மதுரை முதல் அருப்புக்கோட்டை வரை சேதமடைந்துள்ள சாலையை முழுமையாக சீரமைக்கும் வரை எலியார்பத்தி சுங்கசாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைகால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சம்பந்தப்பட்ட 4 வழிச்சாலையை சீரமைக்கும் வரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணத்தில் 30 சதவீதம் விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்சு, 30 சதவீத கட்டண விலக்கு அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது. இந்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.