ஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும்; தாசில்தாரிடம் மக்கள் ஒற்றுமை இயக்கம் மனு
ஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என தாசில்தாரிடம், மக்கள் ஒற்றுமை இயக்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.
காங்கேயம்,
காங்கேயம் துணை தாசில்தாரிடம், மக்கள் ஒற்றுமை இயக்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்து 574 கோவில்களுக்கு சொந்தமாக சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இது இந்து அறநிலையத்துறையின் கணக்கில் உள்ளன.
இதில் காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட ஊதியூரில் உள்ள உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு இப்பகுதியில் சுமார் 1200 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலையில் ஊதியூர் மலையடிவாரத்தில் உள்ள கருக்கம்பாளையம் பிரிவு அருகில், தனியார் பால்பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை ஒரு தனியார் நிறுவனம் கடந்த 2017–ம் ஆண்டு தொடங்கியது.
இந்த நிலம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் எனக்கூறி, சிவன்மலை இந்து அறநிலையத்துறை உத்வி ஆணையர் குறிப்பிட்ட நிலத்தில் எச்சரிக்கை பலகை வைத்தார். அந்த போர்டு உடைக்கப்பட்டு, தொடர்ந்து தனியார் பால் பதப்படுத்தும் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலில் விளக்கு ஏற்றி வழிபடும் போராட்டம் நடத்தப்போவதாக, அறிவித்து அங்கு கூடியுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, போராட்டக்காரர்களால் கலவரம் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். 50 பேர் மீது ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே சிறுபான்மை மக்களின் அமைதியை கெடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டு கலவரத்தை தூண்டிய கலவரக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் நிலத்தில் நடைபெறும் தனியார் பால்பதப்படுத்தும் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.உள்ளூர் பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
நிகழ்ச்சியில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா, புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கேயம் பொறுப்பாளர் கண்ணுசாமி, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையின் நிறுவன தலைவர் பவுத்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.