முன்விரோதத்தில் மீனவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய கும்பல் போலீஸ் தேடுகிறது
முன்விரோதத்தில் மீனவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி சோலை நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மதிவாணன் (வயது25). மீனவர். இவருடைய மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. மதிவாணன் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் குருசுக்குப்பத்திற்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முன்விரோதம் காரணமாக மதிவாணனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து மதிவாணனை சரமாரியாக வெட்டினார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த மதிவாணன் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் போட்டுவிட்டு ரத்தக்காயத்துடன் உயிர்பிழைக்க தப்பி ஓடினார். அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட துரத்திச்சென்று வெட்டினார்கள். இதில் நிலைக்குலைந்த மதிவாணன் ரோட்டில் சரிந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதிவாணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலையும் போலீசார் தேடி வருகிறார்கள். மீனவரை ஓட, ஓட துரத்திச்சென்று கொலை செய்ய முயன்ற சம்பவம் குருசுக்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.