7-வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தம் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்புவது எப்போது? மும்பைவாசிகள் கடும் அதிருப்தி


7-வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தம் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்புவது எப்போது? மும்பைவாசிகள் கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 14 Jan 2019 5:50 AM IST (Updated: 14 Jan 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 7-வது நாளாக இன்றும் பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. அவர்கள் பணிக்கு திரும்பி நகரில் பஸ்கள் இயங்குவது எப்போது என்பது தெரியாமல் மும்பைவாசிகள் கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கின்றனர்.

மும்பை,

நாட்டின் நிதிநகரமான மும்பையில் பஸ் சேவைகளை இயக்கி வரும் பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் 32 ஆயிரம் ஊழியர்கள் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.

சம்பள உயர்வு, மாநகராட்சி பட்ஜெட்டுடன் பெஸ்ட் குழும பட்ஜெட்டை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நகரில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து போய் உள்ளது. ஒரு பஸ் கூட ஓடவில்லை.

மும்பைவாசிகள் பஸ் சேவை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள் மற்றும் மோனோ ரெயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தனியார் வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளன. தனியார் வாகனங்களில் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்து உள்ளது.

இதற்கிடையே பெஸ்ட் நிர்வாகம் ஊழியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுப்பதால், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவின. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த பிரச்சினையில் தலையிட்டும் தீர்வு எட்டப்படவில்லை.

பெஸ்ட் நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் பலன் அளிக்கவில்லை. மாறாக அவர்களின் குடும்பத்தினரையும் போராட்ட களத்தில் குதிக்க தூண்டிவிட்டது.

இந்தநிலையில், பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் பெஸ்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மாநில அரசின் தலைமை செயலாளர், மும்பை மாநகராட்சி கமிஷனர், பெஸ்ட் குழும பொது மேலாளர், போக்குவரத்து, நகர மேம்பாட்டுத்துறை செயலாளர்கள் அடங்கிய கமிட்டி பஸ் ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பெஸ்ட் குழும பட்ஜெட்டை மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைப்பது சாத்தியமற்றது என்பதில் பெஸ்ட் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக இருக்கும் நிலையில், இந்த பேச்சுவார்த்தையும் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது. இதனால் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நேற்றும் 6-வது நாளாக நீடித்தது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்களை பணிக்கு திரும்ப வைப்பதற்கான எந்த பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை.

இதனால் நகரில் இயங்க வேண்டிய 3,200 பஸ்களும் டெப்போக்களில் முடங்கி இருக்கின்றன. பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நேற்று எந்தவித நடவடிக்கைகளும் நடைபெறாத நிலையில், இன்றும் 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது.

பஸ் ஊழியர்களை பணிக்கு திரும்ப செய்வதற்கு மும்பை மாநகராட்சி மற்றும் மாநில அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மும்பைவாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். மேலும் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்புவது எப்போது? என பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Next Story