வீடு புகுந்து கொள்ளை: விறகு கடை அதிபரின் உறவினர் கைது 250 பவுன் நகை, ரூ.6 லட்சம் மீட்பு
மதுரையில் விறகு கடை அதிபர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 250 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை காமராஜர்புரம், குமரன் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 72), மாட்டுத்தாவணியில் விறகுகடை வைத்துள்ளார். இவர் அ.ம.மு.க. பகுதி அவைத்தலைவராகவும், விறகு கடை உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவராகவும் உள்ளார். அவரது மனைவி ஆறுமுகத்தம்மாள். இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து அந்த பகுதியில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
தங்கவேலு அதிகாலை 4 மணிக்கு விறகு கடைக்கு சென்று விடுவது வழக்கம். அவர் சென்ற பிறகு ஆறுமுகத்தம்மாள் வீட்டை பூட்டி விட்டு நடைபயிற்சி செல்வார். அதே போன்று சம்பவத்தன்று காலை கணவர் சென்ற பிறகு அவர் நடைபயிற்சி சென்றார். பின்பு அவர் 6 மணிக்கு வீட்டிற்கு வந்த பார்த்த போது பீரோவில் இருந்த 417 பவுன் நகைகள், 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்தி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதில் அவரிடம் பணம், நகை அதிகமாக இருப்பதை அறிந்தவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என்று போலீசார் எண்ணினார்கள். எனவே தங்கவேலிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இது தவிர அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் ஆய்வு செய்தனர்.
அதில் தங்கவேலுவின் பேத்தி கணவர் சொக்கர்(40) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது அவர் தான் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சொக்கரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் சொக்கர் ஏலச்சீட்டு மற்றும் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஏலச்சீட்டு போட்டவர்களுக்கு உடனே பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளார். அவர் பலரிடம் கடன் கேட்டுள்ளார். அதில் அவருக்கு பணம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் தங்கவேல் வீட்டில் பணம், நகை அதிகமாக இருப்பதை அறிந்தார். அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டு தொடர்ந்து சில நாட்கள் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தார். அதில் காலை 4 மணி முதல் 6 மணி வரை வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று விடுவதை அறிந்து கொண்டார். அதன்படி அதிகாலை 3 மணிக்கு அவரது வீட்டின் முன்பு சென்று இருட்டில் மறைந்து கொண்டார்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்ற பிறகு பின்கதவை உடைத்து உள்ளே சென்று சாவியை எடுத்து பீரோவை திறந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து சொக்கரிடமிருந்து சுமார் 250 பவுன் நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.