கொள்ளைபோனதாக பட்டறை உரிமையாளரிடம் நாடகம்: ரூ.1.28 கோடி நகைகளுடன் தலைமறைவான ஊழியர் கைது


கொள்ளைபோனதாக பட்டறை உரிமையாளரிடம் நாடகம்: ரூ.1.28 கோடி நகைகளுடன் தலைமறைவான ஊழியர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2019 3:11 AM IST (Updated: 15 Jan 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளைபோனதாக நகைப்பட்டறை உரிமையாளரிடம் நாடகமாடி, தலைமறைவான ஊழியரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடிவருகின்றனர்.

மும்பை,

மும்பை கல்பாதேவியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருபவர் மித்தேஷ். இவரது பட்டறையில் பங்கஜ்(வயது37) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் மித்தேஷ் சம்பவத்தன்று மத்தியபிரதேசத்தில் இருந்து கிடைத்த ஆர்டரின் பேரில் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்புள்ள நகைகளை தயார் செய்தார். பின்னர் வாடிக்கையாளரிடம் அந்த நகைகளை ஒப்படைக்க ஊழியர் பங்கஜிடம் கொடுத்து அனுப்பினார்.

இதையடுத்து ரெயிலில் மத்திய பிரதேசத்துக்கு பங்கஜ் நகைகளுடன் பயணம் செய்தார். இந்தநிலையில் இட்டார்சி ரெயில் நிலையத்தில் இருந்து பங்கஜ் பட்டறை உரிமையாளர் மித்தேசை தொடர்புகொண்டார். இதில், தான் கொண்டு வந்த நகைகள் கொள்ளை போய்விட்டதாக கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அவர் நகைகளுடன் தலைமறைவானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மித்தேஷ் ஊழியர் பங்கஜ் மீது எல்.டி. மார்க் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான பங்கஜை செல்போன் அலைவரிசையை வைத்து, அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பங்கஜ் தனது கூட்டாளிகளான பரேஷ், திலிப் சிங் ஆகியோருடன் சேர்ந்து நகைகளை அபகரித்துக்கொண்டு பட்டறை உரிமையாளரிடம் கொள்ளை போனதாக நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story