விளாத்திகுளம் அருகே விபத்தில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு


விளாத்திகுளம் அருகே விபத்தில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
x
தினத்தந்தி 15 Jan 2019 4:08 AM IST (Updated: 15 Jan 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விளாத்திகுளம்,

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 53). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி போலீஸ் நிலையத்தில் கடந்த 20-3-2018-ல் இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் கடந்த சில நாட்களாக பக்கத்து ஊரான சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

கடந்த 11-ந் தேதி இரவில் ஜேக்கப் தனது மோட்டார் சைக்கிளில் காடல்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

விளாத்திகுளம் அருகே சின்னூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சின்னூருக்கு சென்று கொண்டிருந்தார். விளாத்திகுளம் அருகே மேல கல்லூரணி பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இந்த விபத்தில் தலை, வலது காலில் பலத்த காயம் அடைந்த ஜேக்கப்புக்கு அருப்புகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் லேசான காயம் அடைந்த மாரியப்பன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனிடம் விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேக்கப்புக்கு மனைவி மற்றும் மெர்வினா என்ற மகள் உள்ளனர். விபத்தில் இறந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேக்கப்பின் உடல் அடக்கம் நேற்று அவரது சொந்த ஊரான பூதப்பாண்டியில் நடந்தது. இதில் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் கலந்து கொண்டு, ஜேக்கப்பின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Next Story