பிரபல ரவுடி கொலையில் 4 பேர் கைது பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
பிரபல ரவுடியை கொலை செய்த 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
கணபதி,
கோவை கணபதி தங்கம்மாள் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் கரிகாலன் (வயது 33). இவருக்கு திருமணமாகவில்லை. பிரபல ரவுடியான இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததுடன் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா விற்பனையும் செய்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கு தொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் கடந்த 14–ந் தேதி மாலை கரிகாலன் அந்த பகுதியில் உள்ள வேதம்மாள் நகரில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கரிகாலனை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு தலைமறைவானது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 4 பேரையும் தேடி வந்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட செந்தில், சுதாகர், பிரவீன்குமார் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செந்திலுக்கும், கரிகாலனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாகவும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் போலீசாரால் கைது செய்ய செந்தில் தான் காரணம் என கரிகாலன் எண்ணி உள்ளார்.
மேலும் இதுதொடர்பாக கரிகாலன், செந்திலையும் அவருடைய குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் தனது நண்பர்களின் உதவியுடன் கரிகாலனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.