உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவிப்பு


உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 4:30 AM IST (Updated: 17 Jan 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்று கட்சியின் மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவித்துள்ளார்.

தாராபுரம்,

தாராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில், உழவர் தினவிழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில தலைவர் கு.செல்லமுத்து கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநில ஆலோசகர் கே.சி.எம்.பாலசுப்பிரமணியம், மாநில மகளிர் அணித்தலைவி டாக்டர் ராஜரீகா, மாநில செயலாளர் ஈஸ்வரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு கட்சியின் மாநில தலைவர் கு.செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:–

திருப்பூர் மாவட்டத்தின் உயிர் நாடியாக உள்ள ஆனைமலையாறு– நல்லாறு திட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். அதேபோல் அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது. விரைவில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு கொப்பரை தேங்காய் 1– கிலோவிற்கு ரூ.95 விலை நிர்ணயம் செய்துள்ளது. இது விவசாயிகளுக்கு போதுமான விலையாக இல்லை. எனவே கொப்பரை தேங்காய் கிலோ 1–க்கு, ரூ.140 என விலை நிர்ணயம் செய்து, நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வறண்டு கிடக்கும் வட்டமலைகரை ஓடை அணையால் விவசாயிகளுக்கு எந்த பயனுமில்லை.

எனவே வட்டமலைக்கரை ஓடை அணைக்கு பி.ஏ.பி அல்லது அமராவதியின் உபரி நீரை வழங்க, அரசு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். மின்சார வாரியத்தில் சுயநிதி மின் இணைப்பு திட்டத்தில் ரூ.50 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் சாதாரண வரிசையில் பல ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பித்துவிட்டு நீண்ட காலமாக மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணிக்கு உழவர் உழைப்பாளர் கட்சி முழு ஆதரவு அளிக்கும். மேலும் கூட்டணியின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். கடந்த 6 மாதமாக தாராபுரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் தங்களுடைய குறைகளை அரசுக்கு தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை விண்ணப்பித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்த மாதம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தாராபுரத்தில் உள்ள சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story