பாகூர் அருகே பொங்கல் விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு; ஆதரவாளர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


பாகூர் அருகே பொங்கல் விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு; ஆதரவாளர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 5:00 AM IST (Updated: 17 Jan 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே பொங்கல் விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி விஜயவேணி எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டார்.

பாகூர்,

புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக விஜயவேணி உள்ளார். இவரது சொந்த ஊர் பாகூர் அருகே உள்ள மணமேடு கிராமமாகும். இங்கு நடந்த பொங்கல் விழாவில் எம்.எல்.ஏ. நேற்று கலந்துகொண்டார். விழாவின் ஒரு பகுதியாக அவரது கார் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தில் வலம் வந்தது. அதில் எம்.எல்.ஏ. குடும்பத்தினர் இருந்தனர். காரை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 40) என்பவர் ஓட்டினார்.

மணமேடு சாலையில் கார் சென்றபோது, அதற்கு இடையூறாக மினிவேன் ஒன்று நின்றது. அதை ஒதுங்கி நிறுத்து மாறு கார் டிரைவர் மணிவண்ணன் கூறினார். இதனால் மினி வேனில் இருந்தவர்களுக்கும், மணிவண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குணசீலன் (வயது 48) என்பவரின் வீட்டில் இருந்து வந்த மர்மநபர்கள் திடீரென்று மணிவண்ணனை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகராறின்போது எம்.எல்.ஏ. காரின் பின்பக்க கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதை அறிந்த விஜயவேணி எம்.எல்.ஏ., அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் ஆதரவார்கள் குணசீலன் வீட்டின் முன்பு திரண்டனர்.

தகவல் அறிந்த பாகூர், கரையாம்புத்தூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் எம்.எல்.ஏ. தரப்பினர் கார் கண்ணாடியை உடைத்ததாக குணசீலன், சுதர்வாணன், தமிழ்காவலன், தமிழ்குடிமகன் ஆகியோரின் பெயர்களை கூறி, அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் புகார் மனுவாக கொடுத்தால்தான் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரையாம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரவு 8 மணியளவில் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் (பொறுப்பு), பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் எம்.எல்.ஏ. தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கார் கண்ணாடியை உடைத்தவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று கூறினர்.

அதன்பேரில் 3 பேரை போலீசார் பிடித்துச்சென்றனர். ஆனால் மற்றவர்களையும் விரைவில் கைது செய்யவேண்டும் என்று இரவு 10.30 மணிக்கு மேலும் எம்.எல்.ஏ. தரப்பினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

உடைக்கப்பட்ட காரை போலீஸ் நிலையம் எடுத்துச்செல்ல எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மணமேடு பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story