பிரசவத்தின்போது பெண் சாவு: மருத்துவமனை-போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


பிரசவத்தின்போது பெண் சாவு: மருத்துவமனை-போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Jan 2019 4:30 AM IST (Updated: 17 Jan 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டையில், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததால், தனியார் மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலையத்தை அவரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அருகேயுள்ள அப்பாவுபிள்ளைப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி கீர்த்தனா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 14-ந்தேதி இரவு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சுகப்பிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் ரத்தப்போக்கு அதிகமானதால் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கீர்த்தனா இறந்த தகவல் கேட்டதும், அவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கீர்த்தனாவின் உறவினர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்ரேஸ்வரன், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story