ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி வழக்கு அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
தமிழகத்தில் கி.பி. 4–ம் நூற்றாண்டில் இருந்தே ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு,
வட மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் போன்றவை திருவிழாக்களை போல நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர். இதில் சில எதிர்பாராத காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
ஆனால் கோவில் திருவிழாக்களில் தேர் இழுக்கும்போது இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பொது காப்பீடு செய்யப்படுகிறது. இதுபோல ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு, வடமஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் போன்ற விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்கள், பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு சாரா பொது காப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பொது காப்பீடு எப்படி சாத்தியமாகும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி, கோவில் தேர் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பொது காப்பீடு செய்யப்படுகிறது. அதுபோல ஜல்லிக்கட்டுக்கும் காப்பீடு செய்யலாம் என்றனர்.
இதையடுத்து, இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.