மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் மனைவி, மகள் கள்ளக்காதலர்களுடன் கைது


மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் மனைவி, மகள் கள்ளக்காதலர்களுடன் கைது
x
தினத்தந்தி 18 Jan 2019 10:45 PM GMT (Updated: 18 Jan 2019 8:17 PM GMT)

மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆகி உள்ள நிலையில் இதுதொடர்பாக மனைவி மற்றும் மகளுடன் கள்ளக்காதலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஐ.என்.டி.யூ.சி.நகரை சேர்ந்தவர் ஜெகன்நாதராஜா(வயது 58). ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி சொக்கதாய்(வயது 56), மகள் பிரியா (30). பிரியா திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2.1.2016 அன்று இரவு ஜெகன்நாதராஜா வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் மேல் நடவடிக்கைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறி வழக்கை முடித்துவிட்டனர்.

இந்தநிலையில் இறந்த ஜெகன்நாதராஜாவின் சகோதரர் ராதாகிருஷ்ண ராஜா(56), தனது சகோதரர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணைக்கு உத்தரவிட கோரியும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 17.9.2018–ல் இந்த வழக்கில் மறுபுலன் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், பெருமாள்சாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் சொக்கதாயிக்கு ராஜபாளையத்தில் எலெக்ட்ரிக் கடை வைத்திருக்கும் ராமராஜ்(52) என்பவருடனும், ஆசில்லாபுரம் ஆட்டோ டிரைவர் கருப்பையா(58) என்பவருடனும், மகள் பிரியாவுக்கு ராஜபாளையத்தில் ஆன்லைன் வணிகம் செய்து வரும் சத்தியகுமார்(34) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

ஜெகன்நாதராஜா தனது மனைவி மற்றும் மகளை இந்த பிரச்சினையில் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சொக்கதாய், பிரியா ஆகியோர் ஜெகன்நாதராஜா கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்படி அவர்கள் தங்களது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து ஜெகன்நாதராஜாவை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த கொலையை மறைப்பதற்காக சொக்கதாயும், பிரியாவும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெகன்நாதராஜா மாடியில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து இறந்துவிட்டதாக போலீசில் புகார் செய்து நாடகமாடியதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து சொக்கதாய், பிரியா மற்றும் ராமராஜ், சத்தியகுமார், ஆட்டோ டிரைவர் கருப்பையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story