இலங்கை கடற்படையினர் விரட்டியதில் கடலுக்குள் விழுந்து பலியான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்
இலங்கை கடற்படையினர் விரட்டியதில் கடலுக்குள் தவறி விழுந்து பலியான மீனவரின் குடும்பத்துக்கு முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
பனைக்குளம்,
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 12–ந்தேதி சுமார் 600–க்கும் மேற்பட்ட படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக படகுகளை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். மேலும் அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகுகளை விரட்டியடித்தனர்.
இதில் ராமேசுவரத்தில் இருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த இலந்தை கூட்டம் கிராமத்தை சேர்ந்த மீனவர் முனியசாமி கடலுக்குள் தவறி விழுந்து இறந்து போனார். இதையடுத்து அவரது உடல் இலங்கை கடல் எல்லையில் மீட்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டது. இலங்கையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் முனியசாமியின் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான இலந்தை கூட்டம் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் பலியான மீனவர் முனியசாமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்–அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் இலந்தை கூட்டம் கிராமத்திற்கு சென்று இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
அப்போது மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் நல வாரியம் மூலமாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிடவும், மீனவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விதமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு மத்திய அரசின் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் உள்பட பலர் உடனிருந்தனர்.