அந்தியூர் அருகே பயங்கரம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை


அந்தியூர் அருகே பயங்கரம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை
x
தினத்தந்தி 20 Jan 2019 4:30 AM IST (Updated: 20 Jan 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கர்ப்பிணி மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 40). இவர் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஹேமலதா (23). இவர்களுக்கு சிவவர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது.

கைலாசம் தனது தாய் சரோஜா, மனைவி, குழந்தையுடன் ஒலகடத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

புன்னம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (23). இவர் ஹேமலதாவின் பெரியம்மாள் மகன் ஆவார். திருச்சியில் தங்கியிருந்து மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

ஊருக்கு வரும்போதெல்லாம் ஆனந்த் ஹேமலதாவின் வீட்டுக்கு வருவார். அப்போது அவருடன் பேசுவதும், செல்பி எடுப்பதுமாக ஹேமலதாவுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது கைலாசத்துக்கும், அவருடைய தாய்க்கும் பிடிக்கவில்லை. இதனால் ஆனந்திடம் சரோஜா, அடிக்கடி வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறினார். ஆனால் தொடர்ந்து ஆனந்த் ஹேமலதா வீட்டுக்கு வந்து சென்றார்.

இதுகுறித்து சரோஜா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஆனந்தை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம், இனிமேல் ஹேமலதா வீட்டுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கைலாசம் மனைவி ஹேமலதாவையும், குழந்தையையும் புன்னம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றார். அங்கு 3 பேரும் தங்கியிருந்தனர். அங்கிருந்தபடியே கைலாசம் தனது வெல்டிங் பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். எனினும் ஆனந்த் மாமனார் வீட்டுக்கு வந்து மனைவியுடன் பேசுவார் என்று பயந்து ஹேமலதாவையும், குழந்தையுடன் வெல்டிங் பட்டறைக்கு அழைத்து செல்வார்.

வேலை முடிந்ததும் 3 பேரும் இரவில் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்புவார்கள். வழக்கம்போல் வேலை முடிந்ததும் நேற்று இரவு 3 பேரும் மோட்டார்சைக்கிளில் புன்னத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த மோட்டார்சைக்கிளை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்தியூர் அருகே காட்டூர் என்ற இடத்தில் சென்றபோது திடீரென அந்த நபர், கைலாசத்தின் மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார். இதனால் அவருக்கும், கைலாசத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்மநபர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கைலாசத்தின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு வந்தது.

வலி தாங்க முடியாமல் அவர் ‘‘அய்யோ, அம்மா’’ என்று கதறியபடி மோட்டார்சைக்கிளில் இருந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே பின்னால் இருந்த ஹேமலதாவும் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர் மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் கைலாசம் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மனைவி கண் முன்னே இந்த பயங்கர சம்பவம் நடந்தது.

இதுகுறித்து உடனே அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைலாசத்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற மர்மநபர் ஹேமலதாவின் உறவினர் ஆனந்தா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஹேமலதாவுக்கும், இந்த சம்பவத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ? என்று அறிய அவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹேமலதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story