மாவட்ட செய்திகள்

புதுவையில் மீண்டும் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி பெயிண்டர் வெட்டிக் கொலை + "||" + Terror Again in pondichery: Painter's Murder

புதுவையில் மீண்டும் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி பெயிண்டர் வெட்டிக் கொலை

புதுவையில் மீண்டும் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி பெயிண்டர் வெட்டிக் கொலை
புதுவையில் ஓட, ஓட விரட்டி பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார்தோட்டம் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி விஜயா. இவர்களுடைய மகன் பிரதீஷ் (வயது 26), பெயிண்டர்.

நேற்று மாலை முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் இருந்து தனது வீட்டிற்கு பிரதீஷ் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். உடனே பிரதீஷ் அவர்களிடம் இருந்து தப்பி தனது வீட்டிற்கு ஓட முயன்றார்.


ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பிரதீசை ஓட, ஓட விரட்டிச்சென்று அவருடைய வீட்டின் அருகிலேயே சரமாரியாக வெட்டினார்கள். இதில் நிலைகுலைந்த பிரதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய பிரதீசை கண்ட அவருடைய உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை ஆட்டோவில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரதீஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரதீசுக்கும், சாமிபிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் பொங்கல் பண்டிகையையொட்டி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதன்காரணமாக பிரதீஷை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த சிலர் கொலை செய்திருக்கலாம் என்றும் ஒரே பெண்ணை பிரதீஷும் மற்றொருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பான பிரச்சினையிலும் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சமீபகாலமாக புதுவையில் கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. கடந்த (டிசம்பர்) மாதம் நெல்லித்தோப்பில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண், அரியாங்குப்பத்தில் மீனவர் ராமு, ரெட்டிச்சாவடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரன் ஆகியோரும் புதுச்சேரி முத்தியால்பேட்டை மெக்கானிக் அய்யப்பன் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். 2 நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பைனான்சியர் ராமலிங்கம் இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். முத்தியால்பேட்டையில் நேற்று பெயிண்டர் பிரதீஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். மீண்டும் மீண்டும் நடந்து வரும் கொலை சம்பவங்களால் புதுச்சேரியில் பரபரப்பான சூழ்நிலை இருந்து வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...