கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி ராமச்சந்திராநகரை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 72). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி தனபாக்கியத்துடன் ஏமப்பேர் பகுதியில் ஜோதிடம் பார்க்க சென்றார். பின்னர் ஜோதிடம் பார்த்து விட்டு இரவு 2 பேரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அன்பழகன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. இதையடுத்து பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 30 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம், விலையுயர்ந்த 6 பட்டுப்புடவைகள் ஆகியவற்றை காணவில்லை.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பட்டுப்புடவைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.