வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1 லட்சம் கொள்ளை காரையும் கடத்தி சென்றனர்


வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1 லட்சம் கொள்ளை காரையும் கடத்தி சென்றனர்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 7:49 PM GMT)

நொய்யல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை- ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குறுக்குச்சாலையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). இவரது மனைவி செல்வி (50). இவர்களது மகன் பிரேம் (28). நேற்று மதியம் பிரேம் நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். ராமசாமியும், செல்வியும் வீட்டை பூட்டி விட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு ராமசாமியும், செல்வியும் நேற்று மதியம் வந்தனர். அப்போது அவர்கள் வீட்டின் முன்பு நிறுத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை காணவில்லை. மேலும் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராமசாமி-செல்வி தம்பதியினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது பீரோவில் இருந்து துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் அவர்கள் வைத்திருந்த 34 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1¾ லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ராமசாமி வேலாயுதபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கரூரில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து மோப்பநாய் ராமசாமியின் வீட்டில் இருந்து மேப்பம் பிடித்தவாறு வீட்டின் வெளியே சிறிது தூரம் ஓடி சென்று படுத்து கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணம் மற்றும் காரை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் மற்றும் காரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story