ஆரல்வாய்மொழியில் புதிய பாலம் கட்டும் பணி நடப்பதால் நெல்லை- திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து


ஆரல்வாய்மொழியில் புதிய பாலம் கட்டும் பணி நடப்பதால் நெல்லை- திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து
x
தினத்தந்தி 20 Jan 2019 10:30 PM GMT (Updated: 20 Jan 2019 8:06 PM GMT)

ஆரல்வாய்மொழியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் நெல்லை- திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது. மேலும், மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

நாகர்கோவில்,

திருச்சியில் இருந்து நெல்லை, நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக திருவனந்தபுரத்துக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வருவது வழக்கம். இந்த ரெயில் நேற்று நெல்லை- திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டது.

இதுபோல், நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக காலை 6 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். ஆனால் நேற்று இந்த ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக அதாவது 8.30 மணிக்கு புறப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, “ஆரல்வாய்மொழி அருகே புதிதாக ரெயில்வே பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதையடுத்து பாலத்தின் அருகே உள்ள தண்டவாளத்தில் ஆய்வு பணிகள் நடந்தது. இதன் காரணமாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெல்லை-திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டது. இந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டது. மேலும், மும்பை எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட 2½ மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது” என்றனர்.

இதே போல் எர்ணாகுளத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சில தினங்கள் மட்டும் நாகர்கோவிலுக்கு தாமதமாக வரும் என்று ரெயில்வே அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தாமதமாக வந்தது. அதாவது காலை 6.05 மணிக்கு வரவேண்டிய ரெயில் 3 மணி நேரம் தாமதமாக 9.05 மணிக்கு வந்தது.

Next Story