ஜெயலலிதா வகுத்த பாதையைவிட்டு அ.தி.மு.க. அரசு விலகிச் சென்றுவிட்டது டி.டி.வி.தினகரன் பேச்சு
ஜெயலலிதா வகுத்த பாதையை விட்டு தற்போதைய அ.தி.மு.க. அரசு விலகிச்சென்று விட்டது என பார்த்திபனூரில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
பரமக்குடி,
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் 2 நாட்கள் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதையொட்டி நேற்று பார்த்திபனூரில் இருந்து பயணத்தை தொடங்கினார். அப்போது பார்த்திபனூர் முஸ்லிம் ஜமாத் சபையினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த குழந்தைகள் அவருக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன் வீரவாள் பரிசளித்தார்.
அதைத்தொடர்ந்து பார்த்திபனூர் மும்முனை சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:– தமிழ்நாட்டில் தற்போது ஒரு ஆட்சி நடக்கிறது. அந்த ஆட்சி ஜெயலலிதா வகுத்த பாதையை விட்டு வெகுதொலைவிற்கு விலகிச்சென்று விட்டது. மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சி செய்தார் ஜெயலலிதா.
தற்போது நடைபெறும் இந்த மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். ஜெயலலிதா ஆட்சியை கொடுக்க அ.ம.மு.க. ஆட்சி வரவேண்டுமென தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி மக்களும் விரும்புகின்றனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்பு விவசாயிகள், நெசவாளர்கள் யாருக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
நான் ஆளும் கட்சி அல்ல. ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. மேலும் நான் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ, சினிமா நடிகரோ அல்ல. ஆனால் இவ்வளவு கூட்டம் கூடியுள்ளீர்கள். தமிழ்நாட்டை தலைநிமிர செய்திட அ.ம.மு.க. வந்தால் தான் முடியும் என நினைத்து வந்துள்ளீர்கள். திருவாரூர் இடைத்தேர்தலில் அந்த தொகுதி மக்கள் அ.ம.மு.க.விற்கு ஆதரவாக இருப்பதால் அங்கு எங்கள் வெற்றி உறுதியாகி விட்டதால் தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் கஜா புயலை காரணம் காட்டி தேர்தலை நிறுத்தி விட்டனர். தோல்வி பயத்தால் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் பயந்து தேர்தலை தள்ளிப்போடுகின்றனர்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும், துரோகத்திற்கும் நடக்கும் தேர்தலாகும். கட்சியை காப்பாற்ற டாக்டர் முத்தையா எங்களுடன் வந்ததால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப் பட்டுள்ளது.
கட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்–அமைச்சராகவும், 11 பேர் எம்.எல்.ஏ.க்களாகவும் உள்ளனர். வரவுள்ள பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றிற்கான தேர்தல் பிரசாரத்தினை பரமக்குடி தொகுதியில் தொடங்கியுள்ளேன். ஆகவே இந்த தொகுதி மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.