அந்தியூர் அருகே நடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் மனைவி கைது கள்ளக்காதலனும் சிக்கினார்


அந்தியூர் அருகே நடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் மனைவி கைது கள்ளக்காதலனும் சிக்கினார்
x
தினத்தந்தி 22 Jan 2019 12:15 AM GMT (Updated: 21 Jan 2019 8:43 PM GMT)

அந்தியூர் அருகே நடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் அவருடைய மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 40). இவர் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஹேமலதா (22). இவர்களுடைய மகள் சிவவர்ஷினி (2½). கைலாசம் தனது தாய் சரோஜா, மனைவி மற்றும் குழந்தையுடன் ஒலகடத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பவானி அருகே உள்ள புன்னத்தில் ஹேமலதாவின் தந்தை கண்ணன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பரமேஸ்வரி.

திருச்சியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் ஆனந்த் (23). இவர் திருச்சியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். ஆனந்தின் தாய் செல்வியும், ஹேமலதாவின் தாய் பரமேஸ்வரியும் அக்காள், தங்கை ஆவர். எனவே ஆனந்துக்கு ஹேமலதா தங்கை முறை ஆவார்.

மேலும் ஆனந்தின் உடன் பிறந்த தங்கையை புன்னத்தில் உள்ள ஒரு உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். இதனால் புன்னத்தில் உள்ள தங்கையின் வீட்டுக்கு ஆனந்த் வருவார். அப்போது ஆனந்த் தன்னுடைய சித்தி பரமேஸ்வரி வீட்டுக்கு செல்வார். இதில் ஆனந்துக்கும், ஹேமலதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முறை தவறிய இந்த காதலை உறவினர்கள் கண்டித்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையே கைலாசத்துக்கும், ஹேமலதாவுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்துக்கு பின்னரும் ஆனந்துக்கும், ஹேமலதாவுக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்ந்தது. எனவே இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆனந்தை அழைத்து மகளிர் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைலாசம் தனது மனைவி, மகளுடன் புன்னத்தில் உள்ள ஹேமலதாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்தபடியே தவுட்டுப்பாளையம் வெல்டிங் பட்டறைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று வந்தார். அவ்வாறு செல்லும்போது மனைவி ஹேமலதா, மகள் சிவவர்ஷினி ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு வந்துவிடுவார்.

சம்பவத்தன்றும் இரவில் தனது மனைவி, மகளுடன் மோட்டார்சைக்கிளில் கைலாசம் புன்னம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் கைலாசத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அந்த நபர் ஆத்திரம் அடைந்து கைலாசத்தின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமலதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது கைலாசத்தை கொன்றது ஆனந்த் என போலீசாரிடம் ஹேமலதா தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆனந்தை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் ஆனந்தை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே திருச்சியில் இருந்து புன்னத்துக்கு ஆனந்த் வந்து உள்ளார் என்ற ரகசிய தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார் புன்னம் சென்று ஆனந்தை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆனந்த், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

‘ஹேமலதாவுக்கும், எனக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. எனவே ஹேமலதாவை கடத்தி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டேன். இதற்காக சம்பவத்தன்று கைலாசத்தின் மோட்டார்சைக்கிளை பின் தொடர்ந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினேன். இதனால் எனக்கும், கைலாசத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் நான் ஆத்திரம் அடைந்து கைலாசத்தின் கழுத்தை கத்தியால் அறுத்தேன். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் இறந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். தலைமறைவாக இருந்த என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறி உள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆனந்திடம் இருந்து கத்தியும், மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஹேமலதாவையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story