அடுத்தவர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கி மோசடி நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு


அடுத்தவர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கி மோசடி நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 8:50 PM GMT)

காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அடுத்தவர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ராஜாமணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற அவர், அவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காட்டூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் சிலர் வந்து ஒரு மனு கொடுத்தனர். கார்த்திகேயன் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

லால்குடி சரகத்தில் செயல்படும் காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முன்னாள் நிர்வாகக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், 6 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து, அடுத்தவர் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து சாதகமாக செயல்படும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கி ரூ.98 ஆயிரத்து 865 மோசடி செய்துள்ளனர். இதை நான் வெளியே கொண்டு வந்தபோது, தொடர்ந்து வேறு ஆட்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கவிடாமல் தடுக்கும் செயல்களையும் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

சென்னை தாம்பரம் சானிட்டோரியத்தை சேர்ந்த கயல்விழி, அவருடைய கணவர் ராஜேந்திரனுடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது மகன் கே.வி.ராஜா, திருச்சி பொன்மலையில் உள்ள மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்தான். அங்கிருக்கும் விடுதி வார்டன் எனது மகனை சாதியை சொல்லி திட்டி கேவலாக பேசி இருக்கிறார். இதை நேரடியாக நான், எனது மகனுடன் சென்று கேட்டேன். அப்போது வார்டனும், ஒரு அமைப்பின் தலைவரும் சேர்ந்து என்னை பெண் என்றும் பாராமல் அறையில் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்தினர். மேலும் மாற்றுச்சான்றிதழ்(டி.சி.) தரவும் மறுக்கின்றனர். அத்துடன் எங்கள் மீதே பொய் வழக்கு போட்டு பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் மூலம் மிரட்டி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மருங்காபுரி அருகே உள்ள அதிகாரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கொடுத்த மனுவில், “இந்த கிராமத்தில் உள்ள அதிகாரம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சிலர், அரசியல் பிரமுகரின் தூண்டுதலால் புதிய சங்கம் அரம்பித்து அதில் உறுப்பினர்களை சேர்க்க முயற்சித்து வருகின்றனர். எனவே, புதிய சங்கத்தை பதிவு செய்ய தடைவிதிக்க பரிந்துரைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்க தலைவர் திருப்பதி கொடுத்த மனுவில், ‘மத்திய அரசு பணிகளுக்கும், தமிழ்நாடு அல்லாத பிறமாநில அரசுப்பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு சாதி சான்றிதழை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தார்கள் தடையின்றியும், காலதாமதம் இன்றியும் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

துறையூர் அருகே உள்ள காளியாம்பட்டி திருமாநகர் பகுதியை சேர்ந்த கவிதா, கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சேர்ந்து வந்து கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 400 பேர் வசித்து வருகிறோம். ஒரு பொது குடிநீர் குழாய் இணைப்பும், 4 தனிநபர் இணைப்பும் உள்ளது. கிராமத்தில் வசிக்கும் பலர் சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி விடுவதால் எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதில்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்ததன் விளைவாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் தொட்டி வைத்தனர். ஆனால் இதுவரை குழாயில் தண்ணீர் வருவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 8-ந் தேதி முசிறி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்ததன் காரணமாக, துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குடிநீருக்கான இணைப்பு மட்டும் கொடுத்தார். ஆனால், தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை எடுக்காமல் மறுத்தும், அலட்சியம் செய்தும் வருகிறார். எனவே, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம், என்று கூறப்பட்டிருந்தது.

தூய்மை என்ற அமைப்பை சேர்ந்த சந்திரசேகர் கொடுத்த மனுவில், ‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திருச்சி மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குப்பை தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு உற்பத்தியாகும் இடத்திலேயே குப்பை சேகரித்து உரமாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனாலும், நகரின் ஒதுக்குப்புறங்கள், சாலையோரங்கள், நீர்நிலைகள், பயன்பாடற்ற காலி மனைகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. வீதிகளில் குப்பைகளை சேகரிக்கும் மாநகராட்சி பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. வேலைக்கு செல்பவர்கள் அதற்காக காத்திருந்து, பணியாளர்கள் வரவில்லை என்றதும் குப்பைகளை பொட்டலமாக எடுத்து சென்று பொது இடங்களில் வீசி செல்கிறார்கள். குடமுருட்டி ஆற்றங்கரையில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இவற்றை சரி செய்து தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடம் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’ என்று கூறியிருந்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கொடுத்துள்ள மனுவில், ‘கொள்ளிடம் ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் நொச்சியம், ஸ்ரீரங்கம், கூகூர், கிளிக்கூடு ஆகிய இடங்களில் தடுப்பணை அல்லது கதவணை அமைத்திட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. 

Next Story