தைப்பூசத்தையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


தைப்பூசத்தையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:00 AM IST (Updated: 22 Jan 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

தைப்பூசத்தையொட்டி காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மல்லசமுத்திரம்,

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம், சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தா.வரதராசன், நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் கந்தசாமி தங்ககவச அலங்காரத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது பக்தர்கள் தங்கள் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை தேர் மீது எறிந்து வழிபட்டனர். இந்த விழாவையொட்டி ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, மங்களம், மல்லசமுத்திரம், மருளையம்பாளையம், வெண்ணந்தூர், மோர்பாளையம், வீரபாண்டி, அரியானூர், உத்தமசோழபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், தண்ணீர் வழங்கப்பட்டது.

போலீசார் பாதுகாப்பு

மேலும், பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் திருடுபவர்களுக்கு தண்டனை வழங்கும் பொருட்டு அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டது. விழாவையொட்டி அரசு சார்பில் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவில் சேலம் மெட்ரோ குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) சாமிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும், முத்து பல்லக்கில் சாமி திருவீதி உலாவும், சமூக நாடகமும், சத்தாபரண மகாமேரு சிறப்பு அலங்காரத்துடன் சாமி வீதி உலாவும், நாதஸ்வர நிகழ்ச்சியும் நடக்கிறது. வாழ்க்கையின் தத்துவம் எனும் தலைப்பில் சமூக நாடகமும், பாலமேடு சின்னுசாமி கேசவன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாவும், பூசாரியுமான எஸ்.அம்பிகாதேவி, செயல் அலுவலர் மா.சுதா ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story