மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளுக்காக பெரியார் பஸ் நிலையம் நாளை மறுதினம் மூடப்படுகிறது மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் தகவல்


மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளுக்காக பெரியார் பஸ் நிலையம் நாளை மறுதினம் மூடப்படுகிறது மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:30 PM GMT (Updated: 21 Jan 2019 10:17 PM GMT)

ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பெரியார் பஸ் நிலையம் வருகிற 24–ந்தேதி முதல் மூடப்படும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் கூறினார்.

மதுரை,

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ரூ.356 கோடி மதிப்பில் 9 வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற உள்ளன. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 19–ந் தேதி நடந்தது. இந்த திட்டத்தின்படி ரூ.156 கோடி மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் பஸ் இணைக்கப்பட்டு நவீன பஸ் நிலையம் கட்டப்படுகிறது. எனவே தற்போது உள்ள பெரியார் பஸ் நிலையம் மூடப்படுகிறது.

எனவே மாற்று இடங்களில் பஸ்களை நிறுத்துவது, பஸ் நிலையத்தை மூடுவதால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று மாலை நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொது மேலாளர் ராஜா சுந்தர், உதவி போக்குவரத்து போலீஸ் கமி‌ஷனர் ரவிச்சந்திரன் மற்றும் மின்சாரத்துறை, பி.எஸ்.என்.எல்., அறநிலையத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ் சேகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பெரியார் பஸ் நிலையம் வருகிற 24–ந்தேதி (நாளை மறுதினம்) முதல் மூடப்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மாற்று இடங்களை போக்குவரத்து கழகம் கண்டறிய வேண்டும். குறிப்பாக எஸ்.இ.டி.சி. பஸ் நிலையம் மற்றும் எல்லீஸ் நகரில் மீனாட்சி நிலையத்தில் பஸ்களை நிறுத்தலாம். அதன் மூலம் பொதுமக்களின் சிரமங்கள் குறையும். போலீசாரும், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பஸ் நிலையத்திற்கு செல்லும் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார கேபிள்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் தற்போது செயல்படும் பழைய சென்ட்ரல் மார்க்கெட் வாகன காப்பகமும் மூடப்படுகிறது. அங்கு நவீன அடுக்குமாடி வாகன காப்பகம் கட்டப்படுகிறது. எனவே தற்போது அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை தமுக்கத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தமுக்கத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும். மாநகராட்சி சார்பில் பேட்டரி கார் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால் எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி நிலையத்தில் பஸ்களை நிறுத்த மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் வந்திருந்த அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தார். அவர், ‘‘எங்கள் இடத்தில் ஏற்கனவே வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது. எனவே அங்கு அரசு பஸ்களை நிறுத்தக்கூடாது. அங்குள்ள சாலையில் நிறுத்த எங்களுக்கு ஆட்சேபம் இல்லை‘‘ என்றார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ராஜா சுந்தர் பேசும் போது, ‘‘பெரியார் பஸ் நிலையத்தை மூடுவதால் நகரில் ஆங்காங்கே பஸ்களை நிறுத்தினால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே பெரியார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் பஸ்களை நிறுத்த திட்டமிட்டு வருகிறோம். எல்லீஸ் நகர் மீனாட்சி நிலையத்தில் பஸ்களை நிறுத்த மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அனுமதி தந்தால் பொதுமக்களுக்கு எந்த சிரமும் இருக்காது. எஸ்.இ.டி.சி. பஸ் நிலையம் எங்களது பணிமனை. அதில் பஸ்களை நிறுத்த முடியாது. இருப்பினும் மாநகராட்சி தரப்பில் கடிதம் கொடுத்தால் அங்கு பஸ்கள் நிறுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பெரியார் பஸ் நிலைய பகுதிகளை சுற்றி ஷேர் ஆட்டோக்கள் வந்து செல்ல முற்றிலும் போலீசார் தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது“ என்றார்.

இந்த கூட்டத்தில் எல்லீஸ் நகர் 120 அடி சாலை, மகப்பூபாளையம், டி.பி.கே.ரோடு, மேலவெளி வீதி, தெற்கு மாரட் மற்றும் தெற்கு வெளி வீதி, நேதாஜி ரோடு ஆகிய இடங்களில் பஸ்களை நிறுத்தலாம் என அரசு போக்குவரத்து துறை சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதில் சில இடங்களுக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

எனவே இறுதி முடிவு எடுக்க போலீசாரும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகின்றனர். அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் பஸ்கள் எங்கு நிறுத்தப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி நகர் பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story