கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் - 721 மனுக்கள் பெறப்பட்டன


கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் - 721 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 21 Jan 2019 10:51 PM GMT (Updated: 21 Jan 2019 10:51 PM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 721 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 721 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.4 ஆயிரத்து 200 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரமும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.900 வீதம் ரூ.1,800 மதிப்பிலான காதொலி கருவிகளையும் கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு தையல் எந்திரத்தினை கலெக்டர் வழங்கினார்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா நாரையூர் கிராமத்தை சேர்ந்த ஜான் நிக்கோலஸ் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். திருவண்ணாமலை டவுன், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சூர்யா சாத்தனூர் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தார். இவர்களுடைய குடும்பத்துக்கு முதல் - அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவித்தொகையாக தலா ரூ.50 ஆயிரம் கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஷ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story