கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட மென் பொருள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட மென் பொருள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:30 PM GMT (Updated: 21 Jan 2019 11:02 PM GMT)

திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட மென் பொருள் செயல்பாட்டினை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமானது தமிழகம் முழுவதும் 2 தொகுப்புகளாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு, தமிழக முதல் - அமைச்சரால் தலைமை செயலகத்தில் கடந்த 10-ந் தேதி காணொலி காட்சி மூலமாக 14 மாவட்டங்கள் மற்றும் 4 சம்பள கணக்கு அலுவலகங்களில் திட்ட மென் பொருள் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீதமுள்ள மாவட்டங்கள் மற்றும் 5 சம்பள கணக்கு அலுவலகங்களில் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட மென் பொருள் செயல்பாட்டினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் தனித்தனியான இணையதள முகவரி மற்றும் கடவுச் சொல் வழங்கப்பட உள்ளது. அதனை பயன்படுத்தி இந்த திட்டத்திற்குரிய மென் பொருளின் மூலமாக அனைத்து வகை பட்டியல்களையும் தயாரித்து உரிய கருவூலத்தில் இணைய வழியில் சமர்ப்பிக்க அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 31 ஆயிரத்து 172 அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில் 27 ஆயிரத்து 562 பணிப்பதிவேடுகள் உரிய பணம் பெற்று வழங்கும் அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிப்பதிவேடுகளுக்கான விவரங்கள் உரிய அலுவலர்களால் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் உள்ள சுமார் 2 ஆயிரத்து 52 பணியாளர்களுக்கு இந்த திட்டத்தின் மென் பொருள் செயல்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது அரசின் நிகழ் நேர வரவு மற்றும் செலவுகளை உடனடியாகவும், இதர விவரங்களையும் எளிமையாக பெறுவதோடு அரசின் நிர்வாகமும் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கருவூல அலுவலர் (பொறுப்பு) என்.சித்ரா, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட கருவூல பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story