விளாத்திகுளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


விளாத்திகுளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 Jan 2019 11:32 PM GMT (Updated: 21 Jan 2019 11:32 PM GMT)

விளாத்திகுளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே போலீசார் ஒருதலைபட்சமாக வழக்குப்பதிவு செய்ததாக கூறி, கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த வேடநத்தத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் கார்த்திக் கிருஷ்ணன் (வயது 24). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு, தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (27). பட்டதாரியான இவர் வேலை தேடி வருகிறார்.நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் வேடநத்தத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊரான குறுக்குசாலைக்கு புறப்பட்டு சென்றனர். விளாத்திகுளம் அருகே வள்ளிநாயகபுரம் அருகில் சென்றபோது, ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் (40) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் கிருஷ்ணன், முருகவேல் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அவர்களை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் கிருஷ்ணன் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். முருகவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சந்திரசேகரிடம் புகார் மனு பெற்று, குளத்தூர் போலீசார் ஒருதலைபட்சமாக வழக்குப்பதிவு செய்ததாக கூறி, வேடநத்தத்தில் கிராம மக்கள் நேற்று மதியம் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் குளத்தூர்-குறுக்குசாலை ரோட்டில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

உடனே விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story