சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மாணவர் காவல் படை அமைப்பு தொடக்கம் 6,072 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்


சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மாணவர் காவல் படை அமைப்பு தொடக்கம் 6,072 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:30 AM IST (Updated: 22 Jan 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர் காவல் படை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 138 பள்ளிகளில் இருந்து 6,072 மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

சென்னை,

தமிழக பள்ளிகளில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரண-சாரணியர் இயக்கம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாக பள்ளிகளில் மாணவர் காவல்படை என்ற அமைப்பு தொடங்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் மாணவர் காவல்படை திட்டத்தை பள்ளிகளில் தொடங்கவேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.67 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி கடந்த ஆண்டு ஜூலை 21-ந் தேதி அரியானா மாநிலம் குர்கானில் முதன் முதலாக மாணவர் காவல்படை தொடங்கப்பட்டது. காவல்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய 3 துறைகளும் இணைந்து மாணவர் காவல்படை திட்டத்தை செயல்படுத்தும்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் மாணவர் காவல்படை திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 மாவட்டங்களுக்கு தலா ரூ.1.37 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அடுத்தகட்டமாக தனியார் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்தத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகிறார்கள். சென்னையில் 138 மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் இந்தத்திட்டம் நேற்று, முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. 6,072 மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இந்தத்திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு படிப்பு பாதிக்காத வகையில் மாதத்தில் ஒருநாளில், ஒரு மணிநேரம் பயிற்சி கொடுக்கப்படும்.

மாணவர் காவல் படை திட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் மாணவர் காவல்படை திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தில் சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 பேரும், மாணவிகள் 10 பேரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மாணவர் காவல்படைக்கு தனியாக காக்கி நிறத்தில் சீருடை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் தொப்பியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் காவல்படைக்காக வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக்கொடியை கலெக்டர் சண்முகசுந்தரமும், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் அறிமுகப்படுத்தினார்கள். அந்தக்கொடி மாணவ-மாணவிகளிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசும்போது, மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்துவதற்காக மாணவர் காவல் படையில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் 18 வயது தாண்டிய மாணவ-மாணவிகளுக்கு ராணுவ பயிற்சி கொடுக்கப்படுகிறது. அதுபோல இந்தத்திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கும் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு, போலீசாரோடு இணைந்து இவர்கள் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-
சாலை பாதுகாப்பு, சமூக தீமைகளுக்கு எதிராக போராடுதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் இந்தத்திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். ஏற்கனவே காவல்நிலையத்தை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிடும் திட்டம் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாணவர் காவல்படையில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, நல்ல ஆரோக்கியம் மனநிறைவு, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவை மேம்படும். போலீசாருடன் இணைந்து மாணவர் காவல்படை அமைப்பை சேர்ந்தவர்கள் சட்டம் ஒழுங்கை பராமரித்தல், சாலை பாதுகாப்பு முறைகளை ஊக்குவித்தல், சமூக பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்த உதவுவார்கள்.

இந்தத்திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படும்போது, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு காவல்துறை அதிகாரி இருப்பது போன்ற ஒரு நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு வரவேற்றார். வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் சென்னை தலைமையிட துணை கமிஷனர் சரவணன் நன்றி தெரிவித்தார்.

விழாவில், கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன், துணை கமிஷனர்கள் செந்தில்குமார், மல்லிகா, விமலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story