அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: 336 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன அரசு அலுவலகங்களில் பெரும் பாதிப்பு இல்லை


அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: 336 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன அரசு அலுவலகங்களில் பெரும் பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 10:39 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 336 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் பெரும் பாதிப்பு இல்லை.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் ஜாக்டோ–ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத சம்பள நிலுவை தொகை வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10,770 ஆசிரியர்களில் 40 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 4,300 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மொத்தம் உள்ள அரசு ஊழியர்கள் 16,380 பேரில் 1410 பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ஆசிரியர்களில் 40 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாவட்டம் முழுவதும் 1501 பள்ளிகளில் 336 பள்ளிகள் மூடப்பட்டன. இவை அனைத்தும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் ஆகும். இதனால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

அதிக அளவில் பள்ளிகள் மூடப்பட்டதால் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர உடனடியாக இயலாத நிலை ஏற்பட்டது. எனினும் வட்டார வளர்ச்சி மைய ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு மூடப்பட்ட பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நிலையில் பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அரசு உத்தரவினை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு அலுவலகங்களை பொருத்தமட்டில் பெரும் அளவில் பணி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

வேலை நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு விருதுநகர் மாவட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 180 பெண்கள் உள்பட 310 பேர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 2700 பேர் கலந்து கொண்டனர். இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி சாட்சியாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வைரவன், கருப்பசாமி, மாரியப்பன், வெங்கடேசன், சடையப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். முடிவில் செரிப், முத்துராஜ் ஆகியோர் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 பெண்கள் உள்பட 350 பேர் கலந்து கொண்டனர். சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.


Next Story